இராவணனை வெல்வதற்காக சேதுக்கரைக்கு வந்த இராமபிரான் கடலைக் கடக்கும் வழியைக் கூறும்படி வருணனை வேண்டி, ஏழு நாட்கள் தர்ப்பைப் புல்லில் கிடந்த தலமாதலால் 'திருப்புல்லாணி' என்னும் பெயர் ஏற்பட்டது. அதனால் ராமன் 'தர்ப்பசயனப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் ஆதி ஜெகந்நாதன், தெய்வச்சிலையார் என்னும் திருநாமங்களுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் கல்யாண ஜெகந்நாதன். தாயார் கல்யாணவல்லி, பத்மாஸனி ஆகிய திருநாமங்களால் வணங்கப்படுகின்றார். தர்ப்பசயன இராமபிரான் தனி ஸந்நிதி. அச்வத்த நாராயணன், புல்லாரண்ய முனிவர், ஸமுத்ர ராஜன் ஆகியோருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
ராமபிரான் இங்கு அணைகட்ட வந்தபொழுது, இங்கு தவம் செய்துக் கொண்டிருந்த கண்வ முனிவருக்கு தனது வில்லைக் கொடுத்தபடியால் 'தெய்வச் சிலையார்' என்ற திருநாமம் உண்டானதாக ஐதீகம். ஆதிஸேது என்னும் சமுத்திரஸ்நான கட்டம் இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் திருப்புல்லாணியில் தங்கி, தேவிபட்டினம் சென்று நவக்கிரக சாந்தி மற்றும் ஸர்ப்ப சாந்தி செய்து இங்கு வந்து தர்ப்பசயனரை சேவித்து பால்பாயஸம் சாப்பிட்டு சிலகாலம் தங்கினால் புத்திரப் பேறு உண்டாகும் என்று புராண வரலாறு கூறுகிறது.
திருமங்கையாழ்வார் 21 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
|